ஊடகம் Media Essay

ஊடகம் என்றால் கடத்துவது என்று பொருள்படும். ஒரு கருத்தை அல்லது தகவலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரிமாற்றம் செய்ய உதவும் கருவிதான் ஊடகம் எனப்படும். நாம் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் போது மொழி ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது.

கருத்தியலை கட்டமைப்பதும், சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பதும், அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறைகைளைத் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் விளங்குகிறது. ஊடகம் அதன் தன்மைக்கேற்ப நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன அச்சு ஊடகம், அலை ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் மின்னனு ஊடகம்.

ஊடகத்தின் செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம். கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும். கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு பணியாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில், அவர்கள் விரும்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கிச் சென்றடைவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்கிறோம்.

ஒரு கருத்து ஒரு ஊடகத்தின் வழியாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும்போது மக்களுடைய மனங்களிலே அறிதல், தெளிதல், வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன. ஊடக உரிமையாளர்கள், இதழ்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் உரிமையாளரின் தன்மைக் கேற்ப வெளியாகும் செய்திகளின் உருவமும், உள்ளடக்கமும் மாறுபடுகின்றது.

ஊடகங்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பை நியூசிலாந்து பல்கலைக்கழகம் ஆய்வுசெய்துள்ளது. நாள்தோரும் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியினைப் பார்த்த குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்பினைக் கூட முடிக்கவில்லை. ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன‌. ஊடகங்கள் தவறுசெய்வதில்லை. மாறாக அதனைப் பயன்படுத்தும் மனிதர்கள் தான் தனது சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஊடகங்களை சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும். ஊடக ஆன்மீகத்தை வளர்த்து இச்சமூகத்தில் பரவிக்கிடக்கும் தீமைகளைக் களைந்து, வேற்றுமைகளை ஒழித்து, ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊடகங்கள் பற்றிய தெளிவான அறிவு, அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Select your currency
USD United States (US) dollar